போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூரில் வேலை பார்த்த சேலம் டிரைவர் கைது-18 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பிய போது சிக்கினார்


போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூரில் வேலை பார்த்த சேலம் டிரைவர் கைது-18 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பிய போது சிக்கினார்
x

போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூரில் கடந்த 18 ஆண்டுகளாக வேலை பார்த்த சேலம் டிரைவர் சொந்த ஊருக்கு திரும்பிய போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சேலம்

போலி பாஸ்போர்ட்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் வடக்கு ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 43). இவர் சிங்கப்பூரில் வேலை பார்ப்பதாகவும், அதற்கான பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரும்படியும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அங்கிருந்து விண்ணப்பம் வந்தது. இந்த விண்ணப்பத்தின் மீது உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வீரகனூர் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவிட்டார்.

அதன்பேரில் வீரகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் வீரமுத்துவின் வீட்டுக்கு சென்று விசாரித்தார். அப்போது வீரமுத்து சிங்கப்பூர் செல்லவில்லை என்பதும், அவர் அம்மம்பாளையம் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

மேலும் வீரமுத்துவின் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (36) என்பவர் சிங்கப்பூர் சென்று ்டிரைவராக வேலைபார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

5 பிரிவுகளில் வழக்கு

இதையடுத்து ஆள்மாறாட்டம் செய்து போலி பாஸ்போர்ட் மூலம் சிங்கப்பூர் சென்ற ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் புகார் செய்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு இளமுருகன் விசாரணை நடத்தி ஆள்மாறாட்டம் செய்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல், போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்லுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்தார்.

மேலும் ராஜேசை கைது செய்ய சென்னை, திருச்சி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி அதிகாலை சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் ராஜேஷ் திருச்சிக்கு வந்தார். அப்போது அவரை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கைது

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு இளமுருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் ஆகியோர் அங்கு சென்று ராஜேசை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், கடந்த 2002-ம் ஆண்டு ராஜேஷ் வடக்கு ராமநாதபுரத்தில் நூலகராக வேலை பார்த்த உறவினர் வீரமுத்துவின் ரேஷன்கார்டு, புகைப்படம், கல்வி சான்றிதழ் ஆகியவற்றை திருடி போலி பாஸ்போர்ட் எடுத்துள்ளார்.

ராஜேசுக்கு அப்போது 18 வயது நிரம்பாத காரணத்தினால் வீரமுத்துவின் பெயரில் சிங்கப்பூர் சென்று அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அங்கிருந்து அவ்வப்போது நாட்டிற்கு திரும்பிய அவர் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மொத்தம் 18 ஆண்டுகள் சிங்கப்பூரில் வேலை பார்த்துள்ளார். கடந்த ஆண்டு பாஸ்போர்ட் காலம் முடிவடைந்ததால் புதுப்பிக்க விண்ணப்பிக்கும் போது சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து ராஜேசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தலைவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story