கொலை வழக்கில் கைதான 2 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது-கலெக்டர் கார்மேகம் உத்தரவு
கொலை வழக்கில் கைதான 2 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை கலெக்டர் கார்மேகம் பிறப்பித்தார்.
கொலை வழக்கில் கைது
சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் பொக்கிஷ் (வயது 17) என்ற சிறுவன் கொலை செய்யப்பட்டான். இந்த கொலை தொடர்பாக மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருமலைக்கூடல் புதுச்சாம்பள்ளி பகுதியை சேர்ந்த ரவுடிகளான சதீஷ் (23), கார்த்திக் (23) ஆகியோரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் இருவரும் ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசார் விசாரணையில் சதீஷ், கார்த்திக் ஆகியோர் மீது சேலம் மாவட்டம் கருமலைக்கூடல், ஜலகண்டாபுரம், ஈரோடு மாவட்டம் பவானி, சித்தோடு, நம்பியூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக சதீஷ், கார்த்திக் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் பரிந்துரை செய்தார். இதையடுத்து சதீஷ், கார்த்திக் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
இதற்கான உத்தரவை கலெக்டர் கார்மேகம் பிறப்பித்தார். மேலும் இதற்கான ஆணை சிறையில் உள்ள அவர்களிடம் அதிகாரிகள் வழங்கினர்.