கல்லூரி மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவர் கைது
கல்லூரி மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். 5 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
திருப்புவனம்,
கல்லூரி மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். 5 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர்.
மாணவர் தற்கொலை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நெல்முடிகரை பகுதியை சேர்ந்தவர் ஜீவசூர்யா (வயது 18). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், சம்பவத்தன்று அந்த பெண்ணை பார்க்க அவரது ஊருக்கு மோட்டார்சைக்கிளில் சென்றதாகவும் கூறப்படுகிறது.
அப்போது அவரை சிலர் கைகளை கட்டி தாக்கி், மன்னிப்பு கேட்க வைத்து வீடியோவும் எடுத்தனராம். மேலும் மாணவனின் மோட்டார்சைக்கிள், செல்போனை பறித்து கொண்டு, பலத்த காயத்துடன் திருப்புவனத்தில் இறக்கி விட்டு சென்றார்களாம்.
வீட்டிற்கு சென்ற ஜீவசூர்யா அவமானத்தால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே மாணவன் ஜீவசூர்யாவை சிலர் தாக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவியது.
கைது
இதையடுத்து டி.ஐ.ஜி. மயில்வாகணன், போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தங்கத்துரை, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரராஜ், மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே நேற்று முன்தினம் ஜீவசூர்யாவின் உறவினர்கள், அவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இந்நிலையில் மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக கழுகேர்கடை கிராமத்தை சேர்ந்த ஜமாலுதீன் (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரியாஸ்கான், நயினார் முகம்மது உள்பட 5 பேர் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.