3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருப்பாச்சேத்தி கொலை வழக்கில் கைதான 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருப்பாச்சேத்தி கொலை வழக்கில் கைதான 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
குண்டர் சட்டம்
திருப்பாச்சேத்தியை அடுத்துள்ள ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). முன் விரோதம் காரணமாக இவரை கடந்த அக்டோபர் மாதம் 18-ந் தேதி ஒரு கும்பல் கொலை செய்தது. இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி (34), ராஜ்குமார்(29), விஜயகுமார்(25) உள்பட 5 பேர் மீது திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள பழனிச்சாமி, ராஜ்குமார், விஜயகுமார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவிட்டார்.
கடும் நடவடிக்கை
இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் கொலை, கொள்ளை மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் செயல்பட்ட 52 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நவம்பர் மாதத்தில் மட்டும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு கெடும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.