வாடகை காரில் சென்ற பெண்ணிடம் ஆபாசமாக பேசிய டிரைவர் கைது
திருப்பூரில் வாடகைக்கு சென்றபோது, காரில் பயணித்த பெண்ணிடம் ஆபாசமாக பேசிய டிரைவரை போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
திருப்பூரில் வாடகைக்கு சென்றபோது, காரில் பயணித்த பெண்ணிடம் ஆபாசமாக பேசிய டிரைவரை போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண்ணிடம் ஆபாச பேச்சு
திருப்பூர் ராயபுரம் பகுதியை சேர்ந்த 29 வயது பெண், அழகு கலை பயிற்சி நிலையத்தில் படித்து வருகிறார்.
அந்த பெண் நேற்று காலை அழகு கலை பயிற்சிக்கு செல்வதற்காக ஆன்லைன் மூலமாக வாடகை காரை பதிவு செய்தார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு கார் வந்தது. காரில் அந்த பெண் ஏறி புறப்பட்டார். கார் சிறிது தூரம் சென்றதும் டிரைவர் அந்த பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தார்.
நீங்கள் மிகவும் அழகாக இருப்பதாகவும், இதேபோல் உடை அணிந்தால் உங்கள் அழகு மேலும் எடுப்பாக தெரியும் என்றும் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. பின்னர் அழகு கலை பயிற்சி நிலையம் வந்ததும் அந்த பெண் காரில் இருந்து இறங்க வேண்டும் என்று டிரைவரிடம் கூற, கார் கதவை திறக்காமல் அவரிடம் செல்போன் எண்ணை வற்புறுத்தி கேட்டுள்ளார். வேறுவழியின்றி அந்த பெண் தனது கணவரின் செல்போன் எண்ணை கொடுத்து விட்டு கீழே இறங்கி சென்று விட்டார்.
கார் டிரைவர் கைது
இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு அந்த பெண் தனது கணவரிடம் விவரத்தை கூறியுள்ளார். உடனே இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பந்தப்பட்ட வாடகை கார் ஓட்டுனரை பிடித்தனர்.
விசாரணையில் அவர் தாராபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 30) என்பதும், அவர் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ரஞ்சித்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் காரையும் பறிமுதல் செய்தனர்.