கொண்டத்து காளியம்மன் கோவிலில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தி பரப்பிய போதை ஆசாமி கைது
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தி பரப்பிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் வெடிகுண்டு இருப்பதாக வதந்தி பரப்பிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவிலில் வெடிகுண்டு
திருப்பூர் அருகே பெருமாநல்லூர் பகுதியில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் வந்து வழிபட்டு செல்வார்கள்.
இந்த நிலையில் இந்த கோவிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடித்து சிதறும் வாய்ப்பு உள்ளதால் தனக்கு பயமாக உள்ளது என்றும் தமிழக காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கும், கேரள மாநில காவல் துறைக்கும் அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர் தகவல் தெரிவித்தார்.
போதை ஆசாமி கைது
இதையடுத்து உடனடியாக கோவிலில் இருந்த பக்தர்கள் வெளியேற்றப்பட்டு அங்கு சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் இந்த தகவல் வெறும் வதந்தி என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் பெருமாநல்லூரை அடுத்த அப்பியாபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (47) என்பது தெரியவந்தது. இவர் குடிபோதையில் வேண்டுமென்றே இது போன்று வெடிகுண்டு வதந்தியை கிளப்பியதும் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை பரப்பிய கார்த்திகேயனை பெருமாநல்லூர் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.