கரும்பு தோட்டத்தில் ரூ.1 கோடி மீட்பு: கொள்ளை போனதாக நாடகமாடிய விவசாயி அதிரடி கைது-பரபரப்பு வாக்குமூலம்


தலைவாசல் அருகே கரும்பு தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்ட ரூ.1 கோடி மீட்கப்பட்ட வழக்கில் கொள்ளை போனதாக நாடகமாடிய விவசாயியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

சேலம்

தலைவாசல்:

ரூ.1 கோடி கொள்ளை

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள சாமியார்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 45). இவருக்கு ரேவதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி லோகநாதன் தனது குடும்பத்துடன் அங்குள்ள புற்று மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த ரூ.1 கோடி கொள்ளை போனதாக கூறப்பட்டது.

இதுகுறித்து லோகநாதன் தலைவாசல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் விவசாயியான லோகநாதனுக்கு ரூ.1 கோடி எப்படி கிடைத்தது?, அதனை வீட்டில் வைத்திருந்தது ஏன்? என தீவிரமாக விசாரணை நடத்தினர்.

கரும்பு தோட்டத்தில் மீட்பு

இந்தநிலையில் லோகநாதன் வீட்டின் பின்புறம் உள்ள கரும்பு தோட்டத்தில் தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு பை கிடந்தது. அதனை திறந்து பார்த்தபோது 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. இதையடுத்து அந்த பை மீட்கப்பட்டு தலைவாசல் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் முன்னிலையில் ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன. அப்போது அந்த பையில் ரூ.1 கோடி இருந்தது தெரியவந்தது. கொள்ளை அடிக்கப்பட்ட பணம் கரும்பு தோட்டத்துக்கு வந்தது எப்படி?, அதனை வீசி சென்றது யார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

பரபரப்பு வாக்குமூலம்

மேலும் விவசாயி லோகநாதன் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரிக்க தொடங்கினர். முதலில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த லோகநாதன், தீவிர விசாரணையில் பண ஆசையால் கொள்ளை போனதாக நாடகம் ஆடியதாக தெரிவித்தார். மேலும் அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தலைவாசல் அருகே உள்ள சார்வாய்கிராமத்தை சேர்ந்த கணேசனும், நானும் உறவினர்கள் ஆவோம். ரியல் எஸ்டேட் அதிபரான கணேசன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு என்னிடம் ரூ.1 கோடி பணத்தை கொடுத்து, பத்திரமாக வைத்து கொள்ள கூறினார்.

பணத்தாசை

நானும் அதை யாருக்கும் தெரியாமல் ஒரு பையில் வைத்திருந்தேன். இதனிடையே எனக்கு பணத்தின் மீது ஆசை ஏற்பட்டது. அதை எப்படியாவது அபகரிக்க வேண்டும் என்று எண்ணினேன். இதற்காக பையில் இருந்த ரூ.1 கோடியை, வீட்டின் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் மறைத்து வைத்தேன்.

பின்னர் கடந்த 7-ந் தேதி பணம் கொள்ளை போனதாக போலீசில் புகார் அளித்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக கரும்பு தோட்டத்தில் போலீசார் சோதனை செய்து, பணத்தை மீட்டனர்.

விவசாயி கைது

பின்னர் என்னிடம் துருவி, துருவி விசாரித்ததில் நான் பணத்தாசையால் கொள்ளை போனதாக நாடகம் ஆடியதை ஒப்பு கொண்டேன். இவ்வாறு வாக்குமூலத்தில் லோகநாதன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் லோகநாதன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஆத்தூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் ரியல் எஸ்டேட் அதிபர் கணேசன் எதற்காக லோகநாதனிடம் ரூ.1 கோடி பணத்தை கொடுத்தார்?, அந்த பணம் கணேசனுக்கு எப்படி கிடைத்தது? என்றும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கரும்பு தோட்டத்தில் ரூ.1 கோடியை பதுக்கி வைத்து விட்டு, கொள்ளை போனதாக நாடகமாடியதாக விவசாயி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story