சேலம் சீலநாயக்கன்பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் நகை,பணம் பறிப்பு- 2 பேர் கைது
சேலம் சீலநாயக்கன்பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் நகை,பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் மணியனூர் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 52). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், நேற்று முன்தினம் சீலநாயக்கன்பட்டி வேலுநகர் பிரிவு ரோடு அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அண்ணாதுரையை திடீரென வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவரை தாக்கி அவரிடம் இருந்து 3 பவுன் நகை, ரூ.700 பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் வீரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், வழிப்பறியில் ஈடுபட்டது, தாதகாப்பட்டி தாகூர் தெரு பகுதியை சேர்ந்த ஜடேஜா என்ற தியாகராஜன் (32), சந்தியூர் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த குரு என்ற குப்பன் தாஸ் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, பணம் மீட்கப்பட்டது.