டி.என்.பாளையம் அருகே வெவ்வேறு இடங்களில் மொபட் திருடிய 2 பேர் கைது
டி.என்.பாளையம் அருகே வெவ்வேறு இடங்களில் மொபட் திருடிய 2 பேர் கைது
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே உள்ள ஏளூர் மாதாகோவில் வீதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் தனது மொபட்டை கடந்த 5-ந் தேதி டி.ஜி.புதூரில் உள்ள தனியார் மண்டபத்தின் முன்பு நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது மொபட்டை காணவில்லை. யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து நாகராஜ் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவரது மொபட் திருட்டுபோன பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதில் மொபட்டை திருடிய நபரின் உருவம் பதிவாகியிருந்தது. அதை வைத்து போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் மொபட்டை திருடியவர் கணக்கம்பாளையம் பாரதி வீதியை சேர்ந்த நடராஜ் (வயது 52) என்பது தெரியவந்தது, இதையடுத்து நேற்று நடராஜை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மொபட் மீட்கப்பட்டது.
இதேபோல் டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையம் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் டி.ஜி.புதூர் டாஸ்மாக் கடையருகே தனது மொபட்டை நிறுத்தி விட்டு அருகில் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது மொபட் திருடப்பட்டு் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, டி.என்.பாளையம் 4-வது வார்டு பகுதியை சேர்ந்த ரஞ்சித் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.