சிவகிரியில் குடோனில் பதுக்கி விற்பனை்: மூட்டை மூட்டையாக குட்கா பறிமுதல்; அண்ணன்-தம்பி உள்பட 9 பேர் கைது


சிவகிரியில் உள்ள குடோனில் மூட்டை, மூட்டையாக பதுக்கி விற்பனை செய்ய வைத்திருந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அண்ணன்-தம்பி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு

சிவகிரி

சிவகிரியில் உள்ள குடோனில் மூட்டை, மூட்டையாக பதுக்கி விற்பனை செய்ய வைத்திருந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அண்ணன்-தம்பி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரகசிய தகவல்

ஈரோடு மாவட்டம் சிவகிரி புதிய பஸ் நிலையம் அருகே பட்டேல் தெருவில் வாடகைக்கு குடோன் எடுத்து மளிகை பொருட்கள் மற்றும் அதற்குள் மறைமுகமாக குட்காவை வைத்து விற்பனை செய்து வருவதாக, கோவை மண்டல குற்றத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுபற்றி அவர்கள் பெருந்துறை உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயலிடம் தெரிவித்தனர். பின்னர் அவருடைய உத்தரவின்பேரில் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் நேற்று காலை 6 மணி அளவில் சிவகிரி பட்டேல் தெருவில் உள்ள குடோன் பகுதிக்கு சென்று மறைந்திருந்து ரகசியமாக கண்காணித்தனர்.

குட்கா பதுக்கல்

அப்போது வேகமாக வந்த சரக்கு வேன் ஒன்று குடோன் முன்பு நின்றது. பின்னர் வேனில் இருந்த மூட்டைகளை 3 பேர் இறக்கி அதை குடோனில் அடுக்கி வைத்துக்கொண்டு இருந்தனர். உடனே அங்கு மறைந்திருந்த போலீசார் அவர்களை கையும், களவுமாக பிடித்தனர். இதற்கிடையில் பெருந்துறை உதவி போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயலும் அங்கு விரைந்து வந்து, குடோனில் சோதனை செய்தார்.

அப்போது குடோனில் வெங்காயம் மற்றும் அரிசி, உப்பு மூட்டைகளுக்கு இடையில் 20 மூட்டைகளில் 600 கிலோ எடை உள்ள தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் (குட்கா) இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பிடிபட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அண்ணன்-தம்பி

விசாரணையில் அவர்கள், சிவகிரி இளங்கோ தெருவை சேர்ந்த வேல்முருகன் (வயது 48), அவருடைய தம்பி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பட்டேல் தெருவை சேர்ந்த சந்திரசேகர் (45) மற்றும் சிவகிரியை சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் தங்கராஜ் (55) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

மேலும் இளங்கோ தெருவில் வேல்முருகனும், பட்டேல் தெருவில் சந்திரசேகரும் மளிகை கடை வைத்து நடத்தி வருவதும், இவர்கள் 2 பேரும் கர்நாடக மாநிலத்தில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து அவற்றை விற்பனை செய்வதற்காக வாடகைக்கு குடோன் எடுத்து அங்கு பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 600 கிலோ எடை உள்ள குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

9 பேர் கைது

இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சிவகிரி பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் சோதனை செய்தனர். இதில் பழைய பஸ் நிலையத்தில் அந்தோணி டென்னிஸ் (28), சிவகிரி கந்தசாமிபாளையத்தில் பாலசுப்பிரமணியன் (52), சிவகிரி அருகே வாழைத் தோட்டத்தில் மரியமுத்து செல்வன் (36), காரவலசுவில் ஜெயமுருகன் (43), சிவகிரி அருகே அஞ்சூரில் அன்னபாண்டியன் (47), ஜெயபாலன் (40) ஆகியோரது கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் சிவகிரி பகுதியில் குட்கா விற்பனைக்கு வைத்திருந்ததாக ஒரேநாளில் 9 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குடோனில் மூட்டை மூட்டையாக குட்கா பதுக்கி வைத்து இருந்தது சிவகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story