தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சேலத்தில் வழிப்பறி, கொலை முயற்சி உள்பட தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகை பறிப்பு
சேலம் மிட்டாபுதூர் மணியக்கவுண்டர் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர், கடந்த மாதம் மாமாங்கம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அவரை மேட்டூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனது கூட்டாளிகளுடன் வழிமறித்து கத்தியை காட்டி ரூ.2,500 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் கருப்பசாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.
இதேபோல் செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதேஸ். இவர் ஏற்கனவே அன்னதானப்பட்டி பகுதியில் ஒருவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளியேவந்தார்.
பின்னர் கடந்த மாதம் அவர் தாதகாப்பட்டியை சேர்ந்த பால்ராஜ் என்பவரை மிரட்டி அவரிடம் 3 பவுன் நகை, ரூ.2,700-ஐ வழிப்பறி செய்தது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவர், கடந்த 2020-ம் ஆண்டு தனது கூட்டாளிகளுடன் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சித்தன் என்பவரை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் பணத்தை பறிக்க முயன்றார்.
மேலும் கடந்த ஆண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மிரட்டி ரூ.3,200-ஐ பறித்து சென்றதாகவும், அன்னதானப்பட்டி மற்றும் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையங்களில் கார்த்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
சேலம் மாநகரில் பிரகாஷ், மாதேஸ், கார்த்திக் ஆகிய 3 பேரும் தொடர்ந்து வழிப்பறி உள்பட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனருக்கு சூரமங்கலம் மற்றும் அன்னதானப்பட்டி போலீசார் பரிந்துரை செய்தனர்.
புகாரின் பேரில் பிரகாஷ் உள்பட 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்திட, கமிஷனர் நஜ்முல் ஹோடா நேற்று உத்தரவிட்டார். இவர்களில் பிரகாஷ் 2-வது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.