கடந்த ஆண்டில் 208 பேர் குண்டர் சட்டத்தில் கைது


கடந்த ஆண்டில் 208 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

சேலம் மாநகரம், மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 208 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம்

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

சேலம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் தொல்லை என பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

சேலம் மாநகரில் கடந்த ஆண்டில் (2022) 81 ரவுடிகள், தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் 51 பேர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் 16 பேர், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றவர்கள் 9 பேர், லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவர்கள் 5 பேர், பாலியல் குற்றவாளிகள் 3 பேர், விபசார தொழில் குற்றவாளி ஒருவர், பொது வினியோக திட்ட அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் 6 பேர் மற்றும் மண்எண்ணெய் குண்டு வீசிய குற்றத்திற்காக 2 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் என மொத்தம் 174 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகபட்சம்

போலீஸ் துணை கமிஷனர்கள் பரிந்துரையின் பேரில் இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா பிறப்பித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டில் சேலம் மாநகரில் 129 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் கடந்த 25 ஆண்டுகளில் ஒரு ஆண்டில் 174 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதே அதிகபட்சமாகும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 34 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு பரித்துரையின் பேரில் கலெக்டர் கார்மேகம் பிறப்பித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு மாவட்டத்தில் 41 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சேலம் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 208 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story