கடன் செயலி மூலம் பணம் பறித்த 5 பேர் கும்பல் கைது


கடன் செயலி மூலம் பணம் பறித்த 5 பேர் கும்பல் கைது
x

திருப்பூரில் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டி கடன் செயலி மூலமாக பணம் பறித்த 5 பேர் கொண்ட கும்பலை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இந்த கும்பல் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

திருப்பூர்

திருப்பூரில் ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டி கடன் செயலி மூலமாக பணம் பறித்த 5 பேர் கொண்ட கும்பலை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இந்த கும்பல் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடன் செயலி மூலம் மிரட்டல்

திருப்பூர் மாவட்டத்தில் தனியார் கடன் செயலி மூலம் கடன் பெற்றவர்கள், பணத்தை திருப்பி செலுத்திய பிறகும் கூடுதல் பணம் கேட்டு ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டி ஒரு கும்பல் பணம் பறிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தனர். இந்தநிலையில் பெருமாநல்லூர் பொங்குபாளையத்தை சேர்ந்த ஒருவர் கடந்த மாதம் 15-ந் தேதி கடன் செயலி மூலம் ரூ.3 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அந்த தொகையை அவர் திருப்பி செலுத்தினார். அதன்பிறகும் தொடர்ந்து கடன் பெறுமாறு அவருடைய செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 28-ந் தேதி, 4 கடன் செயலி மூலமாக ரூ.15 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். தவணை காலம் முடிவதற்கு முன்பே அவரிடம் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று கூறி குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். அதன்பிறகு சம்பந்தப்பட்ட நபரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு, அவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து மிரட்டல் வந்ததால் பாதிக்கப்பட்ட நபர் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

கால் சென்டர் நிறுவனம்

இது ெதாடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள். திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி முன்னிலையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையில் ஏட்டுகள் பாலுச்சாமி, சந்தானம், பரமேஸ்வரன், காவலர்கள் கருப்பையா, முத்துகுமார், சந்தோஷ்குமார், குமரவேல், சுதாகர் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு துப்பு துலக்கினார்கள்.

பாதிக்கப்பட்ட நபரிடம் பேசிய செல்போன் எண்ணை வைத்து துப்பு துலக்கியபோது அந்த எண், திருப்பூர் ரெயில் நிலையம் அருகே காதர்பேட்டையில் உள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து இயங்கியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அறையில் கால் சென்டர் நிறுவனம் போல் அமைத்து, சிம் பாக்ஸ்களை வைத்து பலரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு வங்கிக்கடன் வாங்குவதற்கு பேசியது தெரியவந்தது. அங்கிருந்த 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தார்கள்.

சிம் பாக்ஸ்கள் பறிமுதல்

விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் மடவூர் வளப்பில் பகுதியை சேர்ந்த முகமது அஸ்கர் (வயது 24), கோழிக்கோடு கொடுவாளியை சேர்ந்த முகமது ஷாபி (36), மலப்புரம் கோட்டக்கால் பகுதியை சேர்ந்த முகமது சலீம் (37), மலப்புரம் வைக்கத்தூர் சோளக்கல் பகுதியை சேர்ந்த அனீஷ் மோன் (33), மலப்புரம் மானூரை சேர்ந்த அஸ்ரப் (46) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 11 சிம் பாக்ஸ்கள், 6 மோடம், 1 யூ.பி.எஸ், 1 பேட்டரி, 500 சிம்கார்டுகள், 3 மடிக்கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சிம் பாக்ஸ்கள் மூலமாக தாங்கள் இருக்கும் இடத்தை கண்டறிய முடியாமல் வெவ்வேறு சிம்கார்டு எண்களில் இருந்து பேச முடியும். ஒரு சிம்பாக்சில் 150 சிம்கார்டுகளை பொருத்தி இன்டர்நெட் உதவியோடு பேசும் வசதி கொண்டது. இதனால் அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த சிம் பாக்ஸ்கள் வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டவை. ஆன்லைன் மூலமாக பெற்று பயன்படுத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

5 பேர் கைது

இவர்கள் ஒருநாளைக்கு சராசரியாக தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 700 பேரை தொடர்பு கொண்டு பேசி, கடன் பெற்றவர்களை மிரட்டியது தெரியவந்துள்ளது. இவ்வாறு செல்போனில் தொடர்பு கொண்டு பேசி மிரட்டுவதற்காக மட்டும் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.3½ லட்சம் முதல் ரூ.4½ லட்சம் வரை கமிஷன் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் செலுத்திய பணம் நைஜீரியா, சீனா, இந்தோனேஷியா நாட்டு செயலி மூலமாக எடுக்கப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

கைதான முகமது சலீம், கேரள மாநிலம் கொரட்டி போலீஸ் நிலைய வழக்கிலும், அனீஷ் மோன், கானாத்தூர் போலீஸ் நிலைய வழக்கிலும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இவர்களில் முகமது அஸ்கர், முகமது ஷாபி, அனீஸ் மோன் ஆகியோர் துபாயில் பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட 5 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடம் இருந்து 20-க்கும் மேற்பட்ட கடன் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் வங்கிக்கணக்கையும் முடக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பாராட்டினார்.


Related Tags :
Next Story