சோலார் அருகே துப்பட்டாவால் காதல் மனைவியின்கழுத்தை இறுக்கி கொல்ல முயற்சி; டிரைவர் கைது
சோலார் அருகே துப்பட்டாவால் காதல் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றதாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
சோலார்
சோலார் அருகே துப்பட்டாவால் காதல் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றதாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கருத்து வேறுபாடு
ஈரோடு மாவட்டம் சோலாரை அடுத்த வெண்டிபாளையம் அருகே உள்ள காந்திபுரம், பாபு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 26). ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி மைவிழி (22.). இவர்கள் 2 பேரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2½ வயதில் ஸ்ரீமிதா என்ற பெண் குழந்தை உள்ளது.
திருமணம் ஆன நாள் முதல் மைவிழிக்கும், காளீஸ்வரனுக்கும் குடும்பத்தில் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. மேலும் மனைவி மீது காளீஸ்வரன் சந்தேகப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி 2 பேருக்கும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
குழந்தையை பார்க்க சென்றார்
இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மைவிழி கணவரை பிரிந்து ஈரோடு அக்ரகாரம் பகுதியில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு சென்றுவிட்டார். குழந்தை ஸ்ரீமிதாவை காளீஸ்வரன் கவனித்து வருகிறார். மேலும் மனைவியிடம் தனது குழந்தையை பார்க்க வரக்கூடாது எனவும் கூறியுள்ளார். இதனால் அவர் கணவர் வீட்டு்க்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீமிதாவுக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதுபற்றி கேள்விப்பட்ட மைவிழி குழந்தையை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
கொலை செய்ய முயற்சி
அப்போது வீட்டில் இருந்த காளீஸ்வரனுக்கும், மைவிழிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த காளீஸ்வரன் அவரை தகாத வார்த்தையால் திட்டி, தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. மேலும் மைவிழியிடம் அவர், "நீ உயிேராடு இருந்தால் எனக்கு பிரச்சினை உன்னை கொன்றால் தான் நானும், எனது மகளும் நன்றாக இருக்க முடியும்" என கூறியுள்ளார். பின்னர் மைவிழி அணிந்திருந்த துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றுள்ளார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மைவிழி மயங்கி கீழே விழுந்தார்.
இதை பார்த்த மைவிழியின் மாமியார் நாகராணி, மைவிழியை மீட்டு் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கைது
இந்த சம்பவம் குறித்து மைவிழி மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் அவர், 'கணவர் காளீஸ்வரன் தன்னை அடித்து உதைத்ததுடன், கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளீஸ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.