கவர்னரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் 22 பேர் கைது


கவர்னரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் 22 பேர் கைது
x

கவர்னரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற ஆதித்தமிழர் பேரவையினர் 22 பேர் கைது

ஈரோடு

ஈரோடு

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் தமிழ்நாடு மற்றும் தலைவர்களை பற்றி பேசாமல் புறக்கணித்ததோடு, சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது தமிழக மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கவர்னரின் பொங்கல் பண்டிகை தேநீர் விருந்து அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் முத்திரையை புறக்கணித்துவிட்டு மத்திய அரசின் சின்னத்தை அச்சிட்டிருப்பதோடு, தமிழ்நாடு கவர்னர் என்பதற்கு பதிலாக தமிழக கவர்னர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு எதிராக கவர்னரின் இந்த தொடர் நடவடிக்கைகளால் அரசியல் கட்சியினர், மாணவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் கவர்னருக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கவர்னரின் உருவ பொம்மை எரிக்கப்படும் என்ற தகவலையடுத்து நேற்று முன்தினம் முதல் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் கல்லூரிகள் முன்பாகவும் நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நேற்று ஆதித்தமிழர் பேரவையினர் கவர்னர் உருவ பொம்மையை எரிப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் ஆதித்தமிழர் பேரவையின் தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து கவர்னர் உருவ பொம்மையையும், உருவ படத்தையும் எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதனை கைப்பற்றி அவர்களை கைது செய்தனர். 4 பெண்கள் உள்பட மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

1 More update

Related Tags :
Next Story