டெல்டா மாவட்டங்களில் 54 ரவுடிகள் கைது


டெல்டா மாவட்டங்களில் 54 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 15 Jan 2023 12:30 AM IST (Updated: 15 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

குற்றம் நடைபெறுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்டா மாவட்டங்களில் 54 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் கூறினார்.

தஞ்சாவூர்

குற்றம் நடைபெறுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்டா மாவட்டங்களில் 54 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் கூறினார்.

ரவுடிகள் வேட்டை

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் (திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும் பொதுமக்கள் அச்சமின்றி இருப்பதை உறுதி செய்யவும் பொது அமைதியை நிலைநாட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 9-ந் தேதி ரவுடிகள் வேட்டை நடைபெற்றது.

இதில் மொத்தம் 81 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 105 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் தஞ்சை மாவட்டத்தில் 12 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 21 பேரும், நாகை மாவட்டத்தில் 9 பேரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 பேரும் அடங்குவர்.

ஆயுதங்கள் பறிமுதல்

கைது செய்யப்பட்ட ரவுடிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள 454 முக்கிய ரவுடிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு 29 வகையான கொடூர ஆயுதங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் குற்ற வழக்குகளில் நீதி மன்றத்தில் ஆஜராகாமல் பிடிக்கட்டளை நிலுவையில் இருந்த 13 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

ரவுடிகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க 161 ரவுடிகள் மீது நன்னடத்தை பிணை ஆணை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட கோட்டாட்சியருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பபட்டது. அதில் 55 ரவுடிகளுக்கு கடந்த 5 நாட்களில் நன்னடத்தை பிணை ஆணை பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே நன்னடத்தை பிணை ஆணை பெற்ற 2 ரவுடிகள் பிணை ஆணையை மீறி மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்ட காரணத்தினால் அவர்களுக்கு பிணை முறிவு ஆணை பெறப்பட்டு சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர்.

தனிப்படை நடவடிக்கை

மேலும் டி.ஐ.ஜி. மேற்பார்வையில் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளின் கீழ் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ரவுடிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் நடமாட்டங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது உள்ள குற்ற வழக்குகளில் விரைந்து தண்டனை பெறுவதற்கு சிறப்பு படையினர் நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும் பொது மக்களின் பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்துதல், கட்டப்பஞ்சாயத்து வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story