குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் சீர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 48). இவர், கடந்த 10-ந்தேதி, தன்னுடைய ஆதரவாளர்களுடன் பசுபதி பாண்டியன் நினைவு நாள் அனுசரிப்புக்கு சென்றபோது, கூடக்கோவில் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாரபத்தி சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்த மறுத்துள்ளார். பின்னர் அவர் பயங்கர ஆயுதங்களுடன் சுங்கச்சாவடி ஊழியர்களை மிரட்டி, அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். இந்தநிலையில், தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நடராஜன் மீது திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு கொலை, கொள்ளை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. எனவே இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், கலெக்டர் அனீஷ்சேகரிடம் பரிந்துரைத்தார். அதன்படி, நடராஜன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.