சினிமா துணை இயக்குனரை கடத்தி துன்புறுத்தி சொத்துக்களை எழுதி வாங்கிய அவரது மைத்துனர் உள்பட 4 பேர் கைது


சினிமா துணை இயக்குனரை கடத்தி துன்புறுத்தி சொத்துக்களை எழுதி வாங்கிய அவரது மைத்துனர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

சினிமா துணை இயக்குனரை கடத்தி துன்புறுத்தி சொத்துக்களை எழுதி வாங்கிய அவரது மைத்துனர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சினிமா துணை இயக்குனர்

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள தெக்கலூர் பகுதியில் வசிப்பவர் பொன்னுச்சாமி என்பவரது மகன் சிவக்குமார் என்ற தங்கதுரை (வயது 52). இவர் சினிமாவில் துணை இயக்குனராக இருந்தார். தங்கதுரையின் சகோதரி அம்பிகா பல்லடம் சேடபாளையம் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தங்கதுரை பல்லடம் போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

சினிமாவில் துணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறேன். எனது பெற்றோர் இறந்து விட்டனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தேன். 3 மாதத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டோம். இந்த நிலையில் பல்லடம் சேடபாளையம் பகுதியில் வசிக்கும் எனது சகோதரி அம்பிகா மற்றும் அவரது கணவர் வேலுச்சாமி ஆகியோர் தொடர்ந்து எனது பெற்றோரின் சொத்துக்களை தங்களுக்கு எழுதித்தருமாறு கேட்டு வந்தனர். நான் மறுத்து வந்தேன்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 25-ந்தேதி எனது மைத்துனர் வேலுச்சாமி, அவரது மகன் கோகுலக்கண்ணன் மற்றும் சிலர் சேர்ந்து என்னை தாக்கி கைகளை பின்புறமாக கட்டி, வாயில் துணியை திணித்து, பல்லடம் அறிவொளி நகர் பகுதியில் உள்ள வேலுச்சாமிக்கு சொந்தமான வீட்டிற்கு கடத்திச் சென்றனர். அங்கு அடைத்து வைத்து சொத்துக்களை எழுதித்தரும்படி கேட்டு அடித்து துன்புறுத்தினர்.

நகை, பணம் பறிப்பு

வலி பொறுக்க முடியாத நான் அவர்கள் சொன்னபடி 21 பத்திர பேப்பர்களில் கையெழுத்து போட்டேன். இதையடுத்து நான் அணிந்திருந்த 13¼ பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம், என்னுடைய குடும்ப அட்டை, வங்கி ஏ.டி.எம். கார்டு, பான் கார்டு மற்றும் எனது சொத்து பத்திரங்களை பறித்துக்கொண்டனர். பின்னர் எனக்கு வலுகட்டாயமாக மது கொடுத்து மயக்கம் அடையச்செய்தனர்.

மதுபோதை தெளிந்த நிலையில் நான் பார்த்தபோது பெங்களூருவில் உள்ள மனநலக் காப்பகத்தில் இருந்தேன். அங்கிருந்தவர்களிடம் தகவல் சொல்லி எனது வளர்ப்புத் தாய் வசந்தி மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தேன். அவர்கள் என்னை பெங்களூருவில் வந்து மீட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சகோதரிக்கு வலைவீச்சு

இதையடுத்து இந்த ஆள் கடத்தல் வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் நேற்று முன்தினம் வேலுச்சாமியின் மகனும் நகர பா.ஜ.க. விவசாய அணி செயலாளருமான கோகுலக்கண்ணனை (25) கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தங்கதுரையின் மைத்துனர் வேலுச்சாமி (56) இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட அறிவொளி நகரை சேர்ந்த சாகுல் அமீது (25), ரியாஸ் கான்(36), அஷ்ரப் அலி(25) ஆகிய 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தங்கதுரையின் சகோதரி அம்பிகாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story