மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல்
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 4 பெண்கள் உள்பட 81 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர், பிப்.17-
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருப்பூர் கிளையின் சார்பில் மறியல் போராட்டம் நேற்று காலை திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்கத்தின் திருப்பூர் கிளை தலைவர் பாபு தலைமை தாங்கினார்.
ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தின்படி தினக்கூலியாக ரூ.380 வழங்க வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் கருணைத்தொகை வழங்க வேண்டும். களப்பணிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் செயலாளர் நாகராஜன், பொருளாளர் மோகன்தாஸ் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜ் பங்கேற்று பேசினார். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் திரளாக மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து திருப்பூர் வடக்கு போலீசார், மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 81 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.