அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த ஆசிரியர் கைது


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த ஆசிரியர் கைது
x

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.10 லட்சம்

பவானி அருகே உள்ள செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 50). இவருடைய 2 மகன்களும் அரசு பணியில் சேருவதற்காக பவானியில் உள்ள ஒரு போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தனர். அந்த மையத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கோகுலர் வீதியை சேர்ந்த இளங்கோவன் (53) என்பவர் வகுப்பு நடத்தினார். அவர் பரமக்குடியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி உள்ளார். அவர் பவானியில் உள்ள பயிற்சி மையத்தில் விடுமுறை தினத்தன்று சிறப்பு வகுப்பு எடுத்து வந்தார்.

ஜெகதீசனும் அடிக்கடி பயிற்சி மையத்துக்கு வந்து சென்றதால், இளங்கோவனை சந்தித்து பேசி உள்ளார். அப்போது இளங்கோவன், தனக்கு அரசு உயர் அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக பல இளைஞர்களுக்கு அரசு வேலை வாங்கி கொடுத்ததாகவும் ஜெகதீசனிடம் கூறி உள்ளார். மேலும், ஜெகதீசனிடம் 2 மகன்களையும் அரசு வேலையில் சேர்த்து விடுவதாக கூறி நம்ப வைத்து உள்ளார். இதையடுத்து ஜெகதீசன் அவரிடம் ரூ.10 லட்சத்தை கொடுத்து உள்ளார்.

கைது

பணத்தை பெற்றுக்கொண்ட இளங்கோவன் அரசு வேலை தொடர்பாக ஜெகதீசனிடம் எதுவும் கூறவில்லை. அதுபற்றி அவர் கேட்டபோதும் முறையான விளக்கத்தை இளங்கோவன் கொடுக்கவில்லை. இதுகுறித்து ஜெகதீசன் கொடுத்த புகாரின்பேரில் பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு இந்த வழக்கு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இளங்கோவனை கைது செய்தார்கள். அவரிடம் நடத்திய விசாரணையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 10-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ.80 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.


Related Tags :
Next Story