திருப்பத்தூரில் தனியார் நிறுவன ஊழியரை விடுதியில்சிறை வைத்து தாக்கிய 7 பேர் கைது
தனியார் நிறுவன ஊழியரை விடுதி அறைக்குள் சிறை வைத்து தாக்கிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்
தனியார் நிறுவன ஊழியரை விடுதி அறைக்குள் சிறை வைத்து தாக்கிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
தனியார் நிறுவன ஊழியர்
சிவகங்கை அருகே பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 57). இவர் சென்னையில் குடும்பத்துடன் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
தனது குலதெய்வ வழிபாட்டிற்காக சொந்த கிராமத்திற்கு வந்த இவர் திருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி ஓய்வெடுத்துள்ளார்.
அதே விடுதியில் இவரது அறைக்கு எதிரே உள்ள அறையில் திருப்பத்தூரை சேர்ந்த சில வாலிபர்கள் வாடகைக்கு தங்கியிருந்தனர். இந்நிலையில் இளங்கோவன் தங்கியிருந்த அறைக்கு சென்ற அந்த வாலிபர்கள், அவரிடம் சகஜமாக பேசி தங்கள் அறைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் அந்த வாலிபர்கள் தங்களது சக நண்பர்களை போன் மூலம் வரவழைத்துள்ளனர். மொத்தம் 7 பேர் சேர்ந்த உடன், இளங்கோவனின் உடலில் கத்தியை வைத்து தாக்கி உள்ளனர். தொடர்ந்து அவர் வைத்திருந்த ரூ.15ஆயிரம்., செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துள்ளனர். மேலும் அவரிடம் பறித்த பணத்தை வைத்து திருப்பத்தூர் பகுதியில் கஞ்சா வாங்கி வந்து அந்த அறைக்குள் அனைத்து வாலிபர்களும் புகைத்துவிட்டு, இளங்கோவனை அடித்து துன்புறுத்தியும், அவரை கேலி செய்தும் செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். தொடர்ந்து அவரை அவரது உறவினர்களிடம் இருந்து உடனடியாக சில லட்ச ரூபாய் கொண்டு வரச் சொல்லுமாறு கூறியுள்ளனர்.
இதையடுத்து இளங்கோவன், தனது உறவினர்களை செல்போன் மூலம் அழைத்து பணத்தை கொண்டு வர கூறியுள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொண்டு வரவில்லை. இந்தநிலையில் இளங்கோவனை அந்த கும்பல் விரட்டி விட்டுள்ளனர்.
7 வாலிபர்கள் கைது
அவர் அங்கிருந்து சென்று நடந்த சம்பவத்தை கூறி திருப்பத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி அதிரடியாக நடவடிக்கை எடுத்து அந்த விடுதிக்கு சென்று சோதனை நடத்தியபோது அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தனிக்குழுவாக அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெவ்வேறு பகுதியில் தலைமறைவாக இருந்த திருப்பத்தூர் நாகராஜன்நகர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ்கான் (23) மற்றும் பத்மசீனிவாசன் (22), சமஸ்கான் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த விவேக் (25), புதுத்தெருவைச் சேர்ந்த அஜித்பாண்டியன் (19), நாகராஜன் நகரைச் சேர்ந்த சித்திக் (20), மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை ஒரு சில மணி நேரத்தில் கைது செய்த போலீசாரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.