ஆட்டோ டிரைவர் கொலையில் 5 பேர் கைது
மதுரையில் ஆட்டோ டிரைவர் கொலையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் ஆட்டோ டிரைவர் கொலையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆட்டோ டிரைவர் கொலை
மதுரை வண்டியூர் யாகப்பா நகர், மீனாட்சி தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 28). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ராதிகா. இவர்களுக்கு அகன்சா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். நேற்று முன்தினம் மாலை வாசுதேவன் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் அவரிடம் தகராறு செய்து தாக்கியது. அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் அருகில் உள்ள கடைக்குள் புகுந்தார்.
ஆனாலும் அந்த கும்பல் கடைக்குள் புகுந்து வாசுதேவனை கழுத்தை அறுத்து விட்டு தப்பியது. உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் வாசுதேவன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முன்விரோதம்
அதில் வாசுதேவனின் தங்கையின் நெருங்கிய நண்பர் அரவிந்தன். அவர் அடிக்கடி தங்கையின் வீட்டுக்கு வருவாராம். சம்பவத்தன்று அவர் வாசுதேவனின் தங்கையை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தனது சகோதரரிடம் தெரிவித்து உள்ளார். உடனே வாசுதேவன் அரவிந்தனை தட்டி கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது.
இதற்கிடையில் வாசுதேவன் குடும்பத்துடன் கேரளாவுக்கு சென்று அங்கு தங்கியிருந்து வேலை பார்த்தார். ஆனால் அங்கு சரியாக வேலை கிடைக்காததால் மீண்டும் அவர் குடும்பத்துடன் மதுரைக்கு திரும்பினார். இது அரவிந்தனுக்கு தெரியவந்தது. எனவே அவர் வாசுதேவனை கொலை செய்ய திட்டமிட்டார். இது தொடர்பாக அரவிந்தன் அவரது நண்பர்களான முத்துக்குமார், கணேஷ்பாண்டி, இந்துகுமார், முருகானந்தம் ஆகியோருடன் பேசினார். பின்னர் அவர்கள் 5 பேரும் சேர்ந்து ஆட்டோவில் வந்து வாசுதேவனை கொலை செய்தது தெரியவந்தது.
5 பேர் கைது
இதை தொடர்ந்து ஆட்டோ டிரைவரை கொலை செய்த வண்டியூர் சதாசிவம்நகரை சேர்ந்த அரவிந்தன் (28), சவுராஷ்டிராபுரம் முத்துக்குமார் (21), விரகனூர் கணேஷ்பாண்டி (30), முருகானந்தம் (30), மேலஅனுப்பானடி இந்துகுமார் (23) ஆகியோரை நேற்று காலை கைது செய்தனர்.