கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்த தாய்-2 மகன்கள் கைது


கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்த தாய்-2 மகன்கள் கைது
x

சங்ககிரி அருகே கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்த தாய்-2 மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சங்ககிரி

சங்ககிரி அருகே சின்னாக்கவுண்டனூர் ஊராட்சி ஜெ.ஜெ.நகரில் இருந்து சொட்டையங்காடு வழியாக செல்லும் காவிரி குடிநீர் குழாய், கடந்த 5 மாதகாலமாக பழுதாகி இருந்தது. அந்த குடிநீர் குழாயை சரிசெய்ய ஊராட்சி பணியாளர்கள் சென்றபோது சொட்டையங்காட்டை சேர்ந்த கவிதா அவருடைய மகன்கள் குகன், கண்ணன் ஆகியோர் பிரச்சினை செய்தனர். இது குறித்து ஊராட்சி தலைவர் சங்கீதா, சங்ககிரி தாசில்தார் பானுமதியிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து தாசில்தார் உத்தரவின்பேரில் நேற்று காலையில் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்பிரபு, கிராம உதவியாளர் சண்முகம் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டார். அப்போது ஊராட்சி பணியாளர்கள் குழாய் இணைப்பை பழுது பார்த்துகொண்டு இருந்தனர். அப்போது கவிதா அவருடைய மகன்கள் குகன், கண்ணன் ஆகியோர் இங்கு குழாய் அமைக்க கூடாது எனக்கூறி, தகாத வார்த்தைகளால் திட்டியும், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சங்ககிரி போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் பிரபு புகார் கொடுத்தார். புகாரின்பேரில் சங்ககிரி போலீசார் வழக்குபதிவு செய்து தாய்-2 மகன்களை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story