பெருந்துறை, சித்தோடு பகுதிகளில் திருட்டு சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் கைது- வீடுகளில் கைவரிசை காட்டிய 3 பேர் சிக்கினர்


பெருந்துறை, சித்தோடு பகுதிகளில் திருட்டு சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். மேலும் வீடுகளில் கைவரிசை காட்டிய 3 பேர் சிக்கினர்.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை, சித்தோடு பகுதிகளில் திருட்டு சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். மேலும் வீடுகளில் கைவரிசை காட்டிய 3 பேர் சிக்கினர்.

ஆயுதப்படை போலீஸ்காரர்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி (வயது 35). இவர் ஈரோடு ஆயுதப்படை பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். மேலும் அவரின் மனைவி அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் போலீஸ்காரர் ராஜீவ்காந்தியின் மளிகை கடை அருகே சந்தேகப்படும்படி சிலர் வந்து செல்வதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று முன்தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது சந்தேகப்படும்படி அங்கு 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. அதன் விவரம் வருமாறு:-

பிடிபட்டவர்களில் ஒருவர் நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த இசக்கி பாண்டி என்பவருடைய மகன் செந்தில்குமார் என்கிற கார்த்திக் (30). இவரை கடந்த 2021-ம் ஆண்டு பெருந்துறை பகுதியில் நடந்த ஒரு மோட்டார்சைக்கிள் திருட்டு வழக்கில் பெருந்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டு உத்தரவின் பேரில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

திருட ஆலோசனை

அதன்பின்னர் அவரை போலீசார் திருட்டு வழக்கு தொடர்பாக பெருந்துறை கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரது காவலுக்கு ஆயுதப்படை போலீஸ்காரர் ராஜீவ் காந்தி என்பவர் வந்துள்ளார். அவர் செந்தில்குமாரிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார்.

அப்போது ராஜீவ்காந்தி, "போலீசாரிடம் சிக்காமல் திருட்டுகளை நடத்துவது எப்படி? என்பதை நான் சொல்லித் தருகிறேன். நீ தண்டனை முடிந்து, என்னை வந்து பார்" என்று கூறியதாக தெரிகிறது.

3 பேர் சந்திப்பு

இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு, சிறை தண்டனை முடிந்து கோவை மத்திய சிறையில் இருந்து செந்தில்குமார் வெளியே வந்துள்ளார். பின்னர் அவர் ஆயுதப்படை போலீஸ்காரர் ராஜீவ்காந்தியை, பெருந்துறையில் உள்ள அவரது மளிகை கடையில் வைத்து சந்தித்துள்ளார்.

அப்போது செந்தில்குமாருடன், மதுரை மேலூரை சேர்ந்த முருகன் மகன் கருப்புசாமி (31), அதே ஊரை சேர்ந்த பாலசுப்பிரமணி (42) ஆகியோரும் சென்றுள்ளனர். அவர்கள் 3 பேரிடம் ஆயுதப்படை போலீஸ்காரர் ராஜீவ்காந்தி, எந்தெந்த வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.

வீடு புகுந்து திருட்டு

அவர் கூறியபடி செந்தில்குமார், கருப்புசாமி, பாலசுப்பிரமணி ஆகியோர் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாத வீடுகளில் புகுந்து ைகவரிசை காட்டியுள்ளனர். அதேபோல் போலீஸ் ரோந்து அதிகம் இல்லாத இடங்களையும் ராஜீவ்காந்தி இவர்களுக்கு காட்டி கொடுத்துள்ளார். அவரது ஆலோசனையின் படி பெருந்துறை, சித்தோடு, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் ஆகிய ஊர்களில் 3 பேரும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 3 பேரும் தாங்கள் நடத்திய திருட்டுகளில், தங்களுக்கு மூளையாக இருந்து, திருட்டுகளை எந்தெந்த இடத்தில் எப்படி நடத்துவது? என்று, தங்களுக்குச் சொல்லிக் கொடுத்ததே போலீஸ்காரர் ராஜீவ் காந்தி தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும் அவர்கள் அடிக்கடி ராஜீவ் காந்தியின் மளிகை கடையில் தான் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

4 பேர் கைது

இதைத்தொடர்ந்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், கருப்புசாமி, பாலசுப்பிரமணி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டதாக ஆயுதப்படை போலீஸ்காரர் ராஜீவ்காந்தியும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் போலீசார் அவர்கள் 4 பேரையும், பெருந்துறை ஜூடிசியல் மாஜிஸ்திேரட்டு விபிஷி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து ஆயுதப்படை போலீஸ்காரர் ராஜீவ்காந்தி உள்பட 4 பேரும் கோபி சிறையில் அடைக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story