ஜேடர்பாளையம் பகுதியில் வீட்டின் மீது மண்எண்ணெய் குண்டு வீசிய 3 வாலிபர்கள் போலீசில் சிக்கினர்
பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையம் பகுதியில் வீடுகளுக்கு தீ வைப்பு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசிய 3 வாலிபர்கள் போலீசில் சிக்கினர்.
மண்எண்ணெய் குண்டு வீச்சு
ஜேடர்பாளையம் சரளைமேட்டில் கடந்த 21-ந் தேதி வக்கீல் துரைசாமிக்கு சொந்தமான சர்க்கரை ஆலையில் இருந்த தொழிலாளர்கள் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதேபோல் புதுப்பாளையம் பழனிசாமி என்பவரின் வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் வடகரையாத்தூரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி வீட்டில் மண்எண்ணெய் குண்டு வீசப்பட்டது.
தொடர்ச்சியாக நடந்த இந்த சம்பவங்களால் ஜேடர்பாளையம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
3 பேர் கைது
இந்தநிலையில் தீ வைப்பு மற்றும் மண்எண்ணெய் குண்டு வீசிய மர்ம நபர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் வடகரையாத்தூரை சேர்ந்த தர்மராஜ் (வயது 30), ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையத்தை சேர்ந்த பிரவீன் என்கிற பரமசிவம் (28), அதே பகுதியை சேர்ந்த சுதாகர் (25) ஆகியோர் தீ வைப்பு, மண்எண்ணெய் குண்டு வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.