காரைக்குடியில் வாலிபர் கொலை வழக்கில்-தாய், சகோதரிகள் உள்பட 9 பேர் கைது


காரைக்குடியில் வாலிபர் கொலை வழக்கில்-தாய், சகோதரிகள் உள்பட 9 பேர் கைது
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் அவருடைய தாய், சகோதரிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடியில் வாலிபர் கொலை வழக்கில் அவருடைய தாய், சகோதரிகள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாலிபர் கொலை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நாச்சுழியேந்தல் தெற்கு பகுதியில் வசிப்பவர் இந்திரா (வயது 50). இவரது கணவர் அழகேஸ்வரன். இவர் அரசு வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகள்களும், 1 மகனும் உண்டு. 3 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மகன் அலெக்ஸ் பாண்டியன் (வயது 26) இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் போர்வெல் மெஷின் வைத்து தொழில் செய்து வந்தார்.

சம்பவதன்று இரவு அலெக்ஸ் பாண்டியன் வீட்டின் முன்பு படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அலெக்ஸ் பாண்டியனை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றது. இந்த கொலை தொடர்பாக காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் மேற்பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாரின் விசாரணையில் பல்வேறு தகவல் கிடைத்தது.

சொத்து பிரச்சினை

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:- அலெக்ஸ்பாண்டியன் தனது சகோதரிகள் யாரையும் வீட்டுக்கு வரக்கூடாது என பிரச்சினை செய்துள்ளார். அவர்களுடைய தந்தை வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றதால் கிடைத்த ஓய்வூதியப்பலன்களுக்கான பணம், அவரது சேமிப்பு பணம் மற்றும் சொத்துக்களுக்காக அவர்களுக்கிடையே பிரச்சினை இருந்தது. இந்நிலையில்தான் தனது சகோதரிகளை வீட்டுக்கு வரக்கூடாது என அலெக்ஸ் பாண்டியன் கூறிவிட்டார்.

அலெக்ஸ் பாண்டியனுக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு இருப்பதால் சொத்துக்கள் நம்மை விட்டு போய்விடும் என அவருடைய சகோதரிகள் கருதினர். இதனால் அவருடைய குடும்பமே ஒன்று சேர்ந்து அலெக்ஸ் பாண்டியனை கொலை செய்ய திட்டம் போட்டனர்.

தாய் உள்பட 9 பேர் கைது

அதன்படி சென்னையில் உள்ள அக்காள் கலையரசி வகுத்துக்கொடுத்த திட்டப்படி திருமங்கலம் அறிவழகன் மூலமாக விருதுநகர் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த கூலிப்படையினர் அலெக்ஸ்பாண்டியனை கொலை செய்தனர். இதற்கு அலெக்ஸ்பாண்டியனின் தாயும், சகோதரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதையடுத்து அலெக்ஸ் பாண்டியனின் அக்காள் சென்னையை சேர்ந்த கலையரசி (36), மற்றொரு அக்காள் தேவகோட்டையை சேர்ந்த தமிழரசி(34), தாய் இந்திரா(50), திருமங்கலத்தை சேர்ந்த அறிவழகன் (26), கூலிப்படையை சேர்ந்த விருதுநகர் வெங்கடேஸ்வரன்(25), விஜயகுமார்(26) மற்றும் 18 வயது சிறுவர்கள் 2 பேர், ராஜபாளையத்தை சேர்ந்த அந்தோணி (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story