சீலநாயக்கன்பட்டி, ஓமலூரில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம்-3 பெண்கள் உள்பட 4 பேர் கைது


சேலம் சீலநாயக்கன்பட்டி, ஓமலூரில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்ததாக 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்

சீலநாயக்கன்பட்டி

சேலம் சீலநாயக்கன்பட்டி சின்னுசாமிநகரில் விபசாரம் நடப்பதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று மதியம் ரோந்து சென்ற இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சிலர் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு இருந்த விபசார புரோக்கர்கள் முருகேசன் (வயது 45) மற்றொரு பெண் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் இருவரும் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ஓசூரை சேர்ந்த 28 வயது பெண் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

ஓமலூர்

ஓமலூர் தாலுகா அலுவலகம் அருகில் கந்தசாமி செட்டியார் என்பவர் வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக ஓமலூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜனுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அந்த இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த 2 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் விபசார புரோக்கர்கள் என்பது தெரிய வந்தது.

உடனே போலீசார் 2 பெண்களையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விபசாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 2 இடங்களில் விபசார புரோக்கர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story