மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மது விற்ற 38 பேர் கைது-600 மதுபாட்டில்கள் பறிமுதல்


மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மது விற்ற 38 பேர் கைது-600 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மது விற்ற 38 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 600 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுபாட்டில்கள் விற்பனை

தொழிலாளர் தினத்தையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு இருந்தார். அவரது உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் போலீசாருக்கு அறிவுறுத்தி இருந்தார். அதன்படி மதுவிலக்கு பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பள்ளிபாளையத்தில் திருச்செங்கோடு சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஜெகநாதன் (வயது 42) என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் ஆவத்திபாளையம் பஸ் நிறுத்தம் அருகே பையில் வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த கார்த்தி (34) என்பவர் போலீசில் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

125 குவாட்டர் பாட்டில்கள்

எருமப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் பவித்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே உள்ள மாட்டு கொட்டகையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக தனிஷ் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 125 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் ஆட்டுச்சந்தை பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்த வெங்கடேஷ் மகன் கார்த்திக் (22) என்பவரை போலீசார் கைது செய்து, 18 குவாட்டர்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

38 பேர் கைது

மாவட்டம் முழுவதும் நடந்த சோதனையில் மொத்தம் 38 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தமாக 600-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் மதுபான பாட்டில்களை கடத்த பயன்படுத்தப்பட்ட ஒரு ஸ்கூட்டர் மற்றும் ஒரு மொபட்டையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story