பெங்களூருவில் இருந்து கோவைக்கு காரில் கடத்த முயன்ற 372 கிலோ குட்கா பறிமுதல் வடமாநில டிரைவர் கைது

சூளகிரி:
பெங்களூருவில் இருந்து சூளகிரி வழியாக கோவைக்கு காரில் கடத்த முயன்ற 372 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வடமாநில டிரைவர் கைது செய்யப்பட்டார்.
குட்கா கடத்தல்
பெங்களூருவில் இருந்து சூளகிரி வழியாக காரில் குட்கா கடத்துவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சூளகிரி அருகே சப்படி அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 372 கிலோ குட்கா, பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது.
கைது- பறிமுதல்
இதுதொடர்பாக கார் டிரைவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்த அனுமன் படேல் (வயது25) என்பதும், பெங்களூருவில் இருந்து கோவைக்கு குட்கா கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கார் டிரைவரை கைது செய்தனர்.
மேலும் காருடன், ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.