மது போதையில் வாகனம் ஓட்டினால் கைது நடவடிக்கை


மது போதையில் வாகனம் ஓட்டினால் கைது நடவடிக்கை
x
தினத்தந்தி 19 Oct 2022 6:45 PM GMT (Updated: 19 Oct 2022 6:46 PM GMT)

தீபாவளி கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திண்டுக்கல்

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தீபாவளி பண்டிகை தினத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அனுமதித்த நேரத்தை தவிர்த்து பட்டாசு வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு பட்டாசுகளை விற்கவோ, அவற்றை வெடிப்பதோ கூடாது. குடிசை வீடுகள், ஓலை கூரைகளுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்.


மேலும் பட்டாசு வெடிக்கும் போதோ அல்லது வேறு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் இலவச தொலைபேசி எண் 100-ல் போலீசாரையும், 112-ல் தீயணைப்புத்துறையினரையும், அவசர மருத்துவ உதவிக்கு 108 ஆம்புலன்சையும் உடனே அழைக்க வேண்டும். அதேபோல் விதிமுறைகளை பின்பற்றி உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசு விற்க வேண்டும். உரிமம் பெறாமல் பட்டாசு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


மேலும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது மது குடித்து விட்டு போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருட்டு, வழிப்பறி சம்பவங்களை தடுக்க குற்றத்தடுப்பு போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். தீபாவளியை குழந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும்.


இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.



Next Story