தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த முதியவர் கைது-ரூ.13½ லட்சம் பறிமுதல்


தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த முதியவர் கைது-ரூ.13½ லட்சம் பறிமுதல்
x

கோவையில் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த முதியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.13½ லட்சம பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்புத்தூர்


கோவையில் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த முதியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.13½ லட்சம பறிமுதல் செய்யப்பட்டது.

பணம் கொள்ளை

கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஜி.கே.டி. நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 56), தொழில் அதிபர். இவர் கோவையில் கட்டுமான பொருட்கள் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டில் உள்ள பீரோவில் ரூ.20 லட்சம் வைத்திருந்தார். இந்த நிலையில் அவர் வியாபாரம் தொடர்பாக சென்னை சென்றார்.

பின்னர் அங்கிருந்து மறுநாள் கோவை திரும்பினார். அப்போது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த ரூ.16 லட்சத்து 65 ஆயிரத்தை காணவில்லை. மீதமுள்ள ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் அங்கேயே இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வக்குமார், வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார்.

முதியவர் கைது

அப்போது அவருடைய வீட்டில் வேலை செய்து வந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சகாதேவன் (62) என்பவரை காணவில்லை. இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதில் சகாதேவன்தான், செல்வகுமார் வீட்டில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் ரகசிய இடத்தில் பதுங்கி இருந்த சகாதேவனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.13 லட்சத்து 65 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைப்பு

பின்னர் அவரை போலீசார் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் சகாதேவனை அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story