வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
திருப்பூர்,
திருப்பூர் பல்லடம் ரோட்டில் கடந்த 10-ந் தேதி திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் சோதனை செய்தனர். அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் 1,850 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியை கடத்தி வந்த கோவை மாவட்டம் மாதம்பட்டி, குப்பனூரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். கார்த்திகேயன் தொடர்ந்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பண்டங்கள் வழங்குதல் பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டதால் கள்ளசந்தைக்காரர் என கருதி, குண்டர் சட்டத்தில் அடைக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார்.
அதன்படி கோவை மத்திய சிறையில் உள்ள கார்த்திகேயனிடம் ஓர் ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை நேற்று போலீசார் வழங்கினார்கள். திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 34 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.