'மைனர்' திருமணம் செய்த, எனது கணவருடன் வாழ பிடிக்கவில்லை:அரசு அதிகாரியிடம் செல்போனில் புகார் அளித்த 17 வயது சிறுமிநெல் அறுவடை எந்திர டிரைவர் கைது
ஆத்தூர்
ஆத்தூர் அருகே 'மைனர்' திருமணம் செய்த எனது கணவருடன் வாழ பிடிக்கவில்லை என அரசு அதிகாரியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு 17 வயது சிறுமி புகார் அளித்தார். அதன்பேரில் நெல் அறுவடை எந்திர டிரைவர் கைது செய்யப்பட்டார்.
குழந்தை திருமணம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நடுவலூர் கிராமம் புத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 28). நெல் அறுவடை எந்திர டிரைவரான இவருக்கும், கெங்கவல்லி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் ('மைனர்') கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது.
பின்னர் அந்த சிறுமி கணவருடன் வாழ பிடிக்காமல் சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் ஜெனிபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அப்போது அந்த சிறுமி தனக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டதாகவும், கணவருடன் வாழ பிடிக்கவில்லை எனவும் தெரிவித்தாள்.
இதையடுத்து சமூக நல அலுவலர் ஜெனிபர், புகார் கூறிய சிறுமியின் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதில் குழந்தை திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது.
கைது
இது குறித்து அவர் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்கொடி வழக்குப்பதிவு செய்து நெல் அறுவடை எந்திர டிரைவரான சதீஷ்குமாரை கைது செய்தார்.