சேலத்தில் நிர்வாண படம் எடுத்ததாக பெண்ணை மிரட்டிய ஆஸ்பத்திரி ஊழியர் கைது
சேலம்
சேலம் பெரிய வீராணம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி உடல் நிலை பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். உடல் நலம் சரியானதும் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் அவரது மனைவியின் செல்போன் எண்ணில் மர்ம நபர் தொடர்பு கொண்டு ஆஸ்பத்திரியில் இருக்கும் போது உங்களை நிர்வாணமாக படம் எடுத்து உள்ளேன். எனவே நான் கூப்பிடும் இடத்திற்கு வரவேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்து உள்ளார்.
இது குறித்து அந்த பெண் சேலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அதே ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்த கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (வயது 32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணிடம் உல்லாசம் அனுபவிக்கும் நோக்கில் நிர்வாண படம் எடுத்ததாக பொய் சொல்லி மிரட்டினேன் என்று கூறினார். இதையடுத்து விவேகானந்தனை போலீசார் கைது செய்தனர்.