சேலத்தில்தாய்கோ வங்கியில் ரூ.94 லட்சம் மோசடி வழக்கில் 3 பேர் கைது
சேலம்
சேலம் 4 ரோடு அருகே தாய்கோ வங்கி உள்ளது. இந்த வங்கியில் 2010-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.94 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அப்போதைய வங்கி மேலாளர் தெய்வசிகாமணி என்பவர், சேலம் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளரான கருப்பூர் தண்ணீர் தொட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது 60) உள்பட 25 பேர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதனிடையே, போலீசாருக்கு பயந்த சக்திவேல், சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அதன்பிறகு இந்த வழக்கு வணிக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட 16 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மேலும், மோசடியில் ஈடுபட்ட ஒருவர் அதற்கான தொகையை செலுத்திவிட்டார். 4 பேர் முன்ஜாமீன் பெற்றிருந்தனர். மேலும், 3 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்து வரும் 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், ரூ.6 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்த சரவணன் (53), ரூ.82 ஆயிரம் மோசடி செய்த அரிசிபாளையம் கிஷோர்குமார் (42), ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் மோசடி செய்த புது கல்லாங்குத்து புதூரை சேர்ந்த சுகவனேஸ்வரன் (42) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.