சேலத்தில்ரவுடி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
சேலம்
சேலம் அன்னதானப்பட்டி அருகே உள்ள தாதகாப்பட்டி கேட் அம்பாள் ஏரி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 30). ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவரை தாக்கிய வழக்கில் ரஞ்சித்குமாரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் ரஞ்சித்குமார் கடந்த மே மாதம் உடையாப்பட்டி பகுதியில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அம்மாபேட்டை போலீஸ் உதவி கமிஷனர் செல்வம், இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் முன்விரோதம் காரணமாக ரஞ்சித்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் இந்த கொலை தொடர்பாக மதன்குமார், மணி, புகழ், மகேந்திரன், குணசேகரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் தொடர்புடைய தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் (43) உள்பட சிலரை தேடி வந்தனர். இந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று சுரேசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.