கொல்லிமலையில் மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன் மீது தாக்குதல் 2 பேர் கைது
கொல்லிமலையில் மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன் மீது தாக்குதல் 2 பேர் கைது
சேந்தமங்கலம்:
கொல்லிமலையில் உள்ள குண்டூர் நாடு ஊராட்சி மருதாங்குளம் பட்டியை சேர்ந்தவர் தாமரை செல்வன் (வயது 22). தொழிலாளி. இவருடைய மனைவி அம்பிகா (21). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அம்பிகா கணவரிடம் கோபித்து கொண்டு ஆலத்தூர் நாடு ஊராட்சியில் சின்னமங்கலம் கிராமத்தில் உள்ள அவருடைய தந்தை சந்திரன் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதையடுத்து தாமரை செல்வன் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மனைவி அம்பிகாவை அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அம்பிகா மறுத்து வந்தார். மேலும் அம்பிகா குடும்பம் நடத்த வராமல் இருப்பதற்கு அவருடைய தந்தை சந்திரன் தான் காரணம் என தாமரை செல்வன் எண்ணினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் மறைந்திருந்த தாமரை செல்வன், சந்திரன் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது அவரை அரிவாளால் வெட்டினார். இதில் அவர் படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார். இதை கண்ட அவருடைய உறவினர்களான பழனிசாமி, சின்னசாமி ஆகியோர் ஓடி வந்து தாமரை செல்வனை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த தாமரை செல்வன் மற்றும் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த சந்திரன் ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து செங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தாமரை செல்வனை தாக்கிய பழனிசாமி (35), சின்னசாமி (45) ஆகிய இருவரையும் கைது செய்தார்.