நாமக்கல் சட்டக்கல்லூரி மாணவர் கொலையில் என்ஜினீயர் உள்பட 5 பேர் கைது


நாமக்கல் சட்டக்கல்லூரி மாணவர் கொலையில்  என்ஜினீயர் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் சட்டக்கல்லூரி மாணவர் கொலையில் என்ஜினீயர் உள்பட 5 பேர் கைது

நாமக்கல்

நாமக்கல்லில் சட்டக்கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் என்ஜினீயர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சட்டக்கல்லூரி மாணவர் கொலை

நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட கொசவம்பட்டி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் ஜீவா. இவருடைய மகன் சங்கீத்குமார் (வயது 21). இவர் ஆந்திராவில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது நண்பர் பிரவீன் என்பவருடன் கடந்த 23-ந் தேதி நள்ளிரவு கொசவம்பட்டி சுடுகாடு அருகே தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு வந்த அலெக்ஸ் என்கிற அலெக்ஸ்சாண்டர் (35), மவுலீஸ்வரன் (23), பாரத் என்கிற பரத் (26) உள்ளிட்டோருக்கும், இவர்களுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதில் சங்கீத்குமார், பிரவீன் ஆகிய இருவரையும் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சங்கீத்குமார் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதையடுத்து சட்டக்கல்லூரி மாணவர் கொலை தொடர்பாக துப்புதுலக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

5 பேர் கைது

இந்த நிலையில் நாமக்கல் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று போதுப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பஸ்சில் வந்து இறங்கிய அலெக்ஸ் என்கிற அலெக்ஸ்சாண்டர் (35), மவுலீஸ்வரன் (23), பாரத் என்கிற பரத் (26) ஆகிய 3 பேரையும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கோணங்கிப்பட்டியை சேர்ந்த அரவிந்த் (19) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கொசவம்பட்டியை சேர்ந்த சூர்யா (24) என்பவரும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் நேற்று மாலையில் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்து இருப்பதும், கைது செய்யப்பட்ட பாரத் என்கிற பரத் என்ஜினீயர் என்பதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story