பொம்மிடி பகுதியில்தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 7 பேர் கும்பல் அதிரடி கைது ஏற்காட்டை சேர்ந்தவர்கள்

பாப்பிரெட்டிப்பட்டி:
பொம்மிடி பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஏற்காட்டை சேர்ந்த 7 பேர் கும்பல் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
நகை கொள்ளை
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி கோட்டமேடு பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 39). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (28). இவர்கள் சென்னையில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இதனால் பொம்மிடியில் உள்ள தங்களுடைய விவசாய தோட்டத்தை குத்தகைக்கு விட்டனர். மேலும் தோட்டத்தில் உள்ள தனி வீட்டில் தாயார் செல்வம், பாட்டி சிவகாமி அம்மாள் ஆகியோர் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி இரவு தோட்டத்து வீட்டுக்கு முகமூடி அணிந்து பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் கேட்டை உடைத்து உள்ளே சென்று 2 பேரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதுடன், அவர்களை கட்டிப்போட்டு 7 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தனிப்படை அமைப்பு
மேலும் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேஷ் மேற்பார்வையில், பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தோட்டத்து வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டது சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் ஏற்காட்டில் உள்ள மேலூரை சேர்ந்த சேந்துமணி மகன் மணி (20), வெள்ளக்கடை நல்லூரை சேர்ந்த பெரியான் (37), நல்லூரை சேர்ந்த கோவிந்தராஜ் (35), மேலூரை சேர்ந்த கார்த்திக் (21), சின்னசாமி மகன் சக்திவேல் (25), ஜெரினாக்காடு பகுதியை சேர்ந்த நரேந்திரன் மகன் சக்திவேல் என்ற நவீன் (20), கோம்பைகாடு பகுதியை சேர்ந்த ரங்கசாமி மகன் பிரவீன் குமார் (21) ஆகிய 7 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
சிறையில் அடைப்பு
அதில் பிடிபட்ட 7 பேருக்கு பொம்மிடி, துரிஞ்சிப்பட்டி, வேப்பாடி ஆற்றுப்பகுதி, கோட்டைமேடு, பில்பருத்தி ஆகிய கிராமங்களில் நடந்த கொள்ள சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே கோட்டைமேடு செல்வம் வீட்டில் கொள்ளையடித்து சென்ற 7 பவுன் நகையை ஏற்காடு மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.1 லட்சத்துக்கு அடகு வைத்து பணத்தை பிரித்துக்கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் ஏற்காடு மத்திய கூட்டுறவு வங்கியில் அடகு வைத்திருந்த 7 பவுன் நகையை மீட்டனர். பின்னர் 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்காடு மலைக்கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு போதுமான வருமானம் இல்லாததாலும், வேலை வாய்ப்புகள் இல்லாத காரணத்தாலும் பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி கிராம பகுதிகளுக்கு மரங்கள் வெட்டும் பணிக்கு ஏராளமான வாலிபர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஏற்காட்டில் இருந்து காய்கறிகளை விற்பதற்கும் பொம்மிடி பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளுக்கு வருகின்றனர். அவ்வாறு பகலில் வந்தவர்கள் பையர் நத்தம், போதக்காடு, அஜ்ஜம்பட்டி, கோம்பைகாடுகள் வழியாக சென்று அந்த பகுதியில் தனிமையில் உள்ள பண்ணை வீடுகள், ஏற்காடு மலையையொட்டி உள்ள பங்களாக்கள், முதியவர்கள், பெண்கள் இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு செல்கின்றனர். பின்னர் இரவு நேரங்களில் குழுவாக சென்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.






