கைதான ஆயுர்வேத டாக்டர் வீட்டில் துப்பாக்கி- கள்ள நோட்டுகள் பறிமுதல்
கொல்லத்தில் நடந்த திருட்டு வழக்கில் கைதான ஆயுர்வேத டாக்டர் வீட்டில் துப்பாக்கி, கள்ளநோட்டுகள் மற்றும் தங்க முலாம் பூசிய கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போத்தனூர்
கொல்லத்தில் நடந்த திருட்டு வழக்கில் கைதான ஆயுர்வேத டாக்டர் வீட்டில் துப்பாக்கி, கள்ளநோட்டுகள் மற்றும் தங்க முலாம் பூசிய கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆயுர்வேத டாக்டர்
குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஹரேந்திரன் என்ற எர்வின் எவின்ஸ் (வயது 49). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவை வந்து வெள்ளலூர் ராமசாமி கோனார் நகரில் உள்ள தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
அவர், தங்கராஜ் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் தான், ஆயுர்வேத டாக்டர் என்றும், திருப்பூரில் மருத்துவமனை நடத்தி வருவதாகவும், குடும்பத்தினரை பின்னர் அழைத்து வர உள்ளதா கவும் கூறி உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரள போலீசார் திடீரென்று ஹரேந்திரன் தங்கி இருக்கும் வீட்டுக்கு வந்தனர்.
திருட்டு வழக்கில் கைது
அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் அருகே தலையோலபறம்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக ஹரேந்திரனை கைது செய்து கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் தனது வீட்டில் தங்கி இருந்த ஹரேந்திரன் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக போத்தனூர் போலீசில் தங்கராஜ் புகார் செய்தார்.
இதை தொடர்ந்து போலீசார் ஹரேந்திரன் தங்கி இருந்த வீட்டின் கதவை திறந்து சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்ட பொருட்களும் இருந்தன.
கள்ள நோட்டுகள் பறிமுதல்
மேலும் ஒரு மேஜையின் கீழ் ஒரு பிளாஸ்டிக் டப்பா இருந்தது. அதற்குள் 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.
உடனே போலீசார் அதை எடுத்து பார்த்த போது ஒருபுறம் மட்டுமே அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்தது.
மேலும் அந்த டப்பாவுக்குள் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை கட்டிகளும், ஒரு துப்பாக்கியும் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த துப்பாக்கி தொடர்பான ஆவணங்கள் ஏதாவது இருக்கிறதா என்று சோதனை நடத்திய போது துப்பாக்கி வாங்கியதற்கான ரசீதும் கிடைத்தது.
காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
இது தொடர்பாக போத்தனூர் போலீசார் ஹரேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் அவர் கேரளாவில் நடந்த திருட்டு வழக்கில் கைதாகி கேரள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதால், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
வெள்ளலூரில் தங்கி இருந்த ஹரேந்திரன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒருபுறம் மட்டும் அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 5 பண்டல், 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு கள் 7 பண்டல், 9 போலி தங்க கட்டிகள், ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் எந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
ஏர்ஹன் ரக துப்பாக்கி
மேலும் அவர் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி ஏர்ஹன் ரகத்தை சேர்ந்தது. அதை அவர் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி உள்ளார்.
இதை வைத்து பார்க்கும்போது கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் கும்பலுடன் ஹரேந்திரனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
எனவே அவரை காவலில் எடுத்து விசாரணை செய்தால்தான் முழு விவரமும் தெரியவரும். எனவே அவரை காவலில் எடுக்க விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும்.
மேலும் அவர் தன்னை ஆயுர்வேத டாக்டர் என்று கூறி உள்ளார். அவர் அதற்கான சான்றிதழை வைத்து இருக்கிறாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.