பாரதமாதா கோவில் பூட்டை உடைத்து நுழைந்த வழக்கு; சிறையில் உள்ள பாஜக மாநில துணைத்தலைவருக்கு ஜாமின்
பாரதமாதா கோவில் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்ததற்காக பாஜக மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கைது செய்யப்பட்டார்.
சென்னை,
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் கடந்த 11-ம் தேதி சுதந்திரதின அமுத பெருவிழாவையொட்டி பாஜகவினர் கடந்த 11-ம் தேதி ஊர்வலம் நடத்தினர்.
இந்த ஊர்வலம் முன்னாள் எம்.பி.யும், பாஜக மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள பாரதமாத கோவிலுக்கு செல்ல பாஜகவினர் முற்பட்டனர். பாரதமாதா கோவில் கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை திறக்குமாறு பாரதமாத கோவில் காப்பாளரிடம் கேட்டனர்.
அப்போது, காப்பாளர் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறினார். இதனால், ஆத்திரமடைந்த ராமலிங்கம் தலைமையிலான பாஜகவினர் பாரதமாத கோவில் நுழைவு வாயில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு பாரதமாத சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு கோஷமிட்டனர். பின்னர், தாங்கள் கொண்டு வந்த ஒரு பூட்டை நினைவாலய கேட்டில் மாட்டிவிட்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து, பாரதமாத கோவில் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்த சம்பவத்தில் தமிழ்நாடு பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கத்தை போலீசார் கடந்த 14-ம் தேதி அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் சிறையில் உள்ள தனக்கு ஜாமின் வழங்கக்கோரி ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, பாராதமாதா கோவில் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே சென்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பாஜக மாநில துணைத்தலைவர் ராமலிங்கத்திற்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பாப்பாரப்பட்டியில் உள்ள போலீஸ் நிலையத்தில் ராமலிங்கம் வாரந்தோறும் திங்கட்கிழமை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து அவருக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதையடுத்து ராமலிங்கம் சிறையில் இருந்து நாளை விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.