விதிகளை மீறி குடியிருப்பு பகுதியில் பட்டாசு தயாரித்தவர் கைது
சிவகாசி நகரின் மையப்பகுதியில் உள்ள கட்டிடத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
சிவகாசி,
சிவகாசி நகரின் மையப்பகுதியில் உள்ள கட்டிடத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
பட்டாசு தயாரிப்பு
சிவகாசி உட்கோட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உரிய அனுமதி பெற்று இயங்கி வரும் நிலையில் இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் விதிமீறல்கள் காரணமாக பட்டாசு உற்பத்திக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பட்டாசு ஆலைகளில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலர் தற்போது வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சிலர் அப்பாவி தொழிலாளர்களை வனப்பகுதியிலும், வீடுகளிலும், பட்டாசு கடைகளிலும், காலியாக உள்ள கட்டிடங்களிலும் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.இதுபோன்ற விதிமீறலால் தாயில்பட்டியில் ஒரு பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டு ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
வாலிபர் கைது
இந்த சம்பவத்தை தொடர்ந்து சிவகாசி போலீசார் சந்தேகத்துக்கு இடமான பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். இதில் சிவகாசி நகரின் மையப்பகுதியான தெய்வானை நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற போது அங்கு பெட்டி, பெட்டியாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் தயாரித்து வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் சித்துராஜபுரத்தை சேர்ந்த பால்பாண்டி, சாமிபுரம் காலனியை சேர்ந்த வைரமுத்து, செங்கமலப்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (வயது40) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.
கடும் நடவடிக்கை
வெடி விபத்து ஏற்பட்டால் அதிக அளவில் பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்படும் என்று தெரிந்தும் சிலர் குடியிருப்பு பகுதியிலும், ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலும் பட்டாசுகளை அச்சம் இன்றி தயாரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக தலைமறைவான 2 பேரை தேடி வருகிறார்கள்.