கொலை, கொலை முயற்சி வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கொலை வழக்கு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேரந்த காளிமுத்து மகன் மணிகண்டன் (வயது 35) என்பவரை கடந்த 10.10.22 அன்று மடத்தூர்-சோரீஸ்புரம் ரோட்டில் வைத்து கொலை செய்த வழக்கில், தூத்துக்குடி பேரூரணி, சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த தங்கம் மகன் பாலமுருகன் (32), புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்த பிச்சையா மகன் வேல்முருகன் (23), புதுக்கோட்டை ராஜீவ் நகரை சேர்ந்த சரவணன் மகன் அருண் அய்யாத்துரை என்ற அய்யாத்துரை (24) ஆகிய 3 பேரையும் சிப்காட் போலீசார் கைது செய்தனர். இதே போன்று தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஜெயராம பாண்டியன் மகன் மோகன் என்ற மோகன்ராஜ் (39) என்பவரை வடபாகம் போலீசார் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாலமுருகன், வேல்முருகன், அருண் அய்யாத்துரை என்ற அய்யாத்துரை, மோகன் என்ற மோகன்ராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.
நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேர், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 38 பேர் உள்பட 222 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.