போலி பில் தயாரித்து ரூ.13 கோடி மோசடி செய்தவர் கைது


போலி பில் தயாரித்து ரூ.13 கோடி மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2023 8:45 PM GMT (Updated: 16 Jun 2023 8:45 PM GMT)

கோவையில் ஜி.எஸ்.டி. செலுத்தாமல் போலி பில் தயாரித்து ரூ.13 கோடி மோசடி செய்தவரை நுண்ணறிவு இயக்குனரக அதிகாரிகள் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவையில் ஜி.எஸ்.டி. செலுத்தாமல் போலி பில் தயாரித்து ரூ.13 கோடி மோசடி செய்தவரை நுண்ணறிவு இயக்குனரக அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த மோசடி குறித்து கூறப்படுவதாவது:-

அதிகாரிகளுக்கு தகவல்

தொழில் நகரான கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. என்று அழைக்கப்படும் சரக்கு சேவை வரி செலுத்த வேண்டும். இந்த வரியை செலுத்தாமல் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பல தனியார் நிறுவனங்களில் ஜி.எஸ்.டி. செலுத்தாமல் போலி பில் தயாரித்து வழங்குவதாக கோவை உக்கடம் பஸ் நிலையம் அருகே உள்ள ஜி.எஸ்.டி. நுண்ணறிவு இயக்குனரகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஒருவர் கைது

இதையடுத்து ஜி.எஸ்.டி. நுண்ணறிவு இயக்குனரக அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து கோவையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவை மாநகர பகுதியில் ஒரு நபர் ஜி.எஸ்.டி. செலுத்தாமல் இருப்பதற்காக பல்வேறு நிறுவனங்களுக்கு போலி பில் தயாரித்து கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த அந்த நபரை கைது செய்தனர். அந்த நபர் மோசடி செய்தது ரூ.13 கோடி ஆகும். இந்த மோசடி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து ஜி.எஸ்.டி. இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:-

செல்போன்கள்- போலி பில்கள் பறிமுதல்

தற்போது கைது செய்யப்பட்டு உள்ள நபர், 8 நிறுவனங்கள் நடத்தி வருவதாக முன்பதிவு செய்து உள்ளார். சோதனையில் அதுபோன்று எந்த நிறுவனங்களும் செயல்படவில்லை.

எனவே அந்த நபர் மோசடி செய்வதற்கு பயன்படுத்திய செல்போன்கள், போலி பில்கள் உள்பட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதாலும், இதில் பலருக்கு தொடர்பு இருப்பதால், கைது செய்யப்பட்ட நபர் குறித்த விவரத்தை வெளியிட்டால், மற்ற நபர்கள் தப்பிவிடுவார்கள்.

இந்த மோசடி கும்பல் ரூ.500 கோடிக்கும் மேல் மோசடி செய்து இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. எனவே கைதான நபர் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தேடி வருகிறோம்.

இவ்வா று அவர்கள் கூறினார்கள்.


Next Story