வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்புவதாக கூறி ரூ.1¾ லட்சம் மோசடி செய்தவர் கைது


வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்புவதாக கூறி ரூ.1¾ லட்சம் மோசடி செய்தவர் கைது
x

வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்புவதாக கூறி ரூ.1¾ லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

வெளிநாட்டுக்கு செல்ல

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் இடையக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 54). இவர் வெளிநாடுகளில் வேலை செய்வதற்கு ஆட்களை அனுப்பும் பணியை செய்து வருகிறார். இதையடுத்து, காமராஜ் 9 பேரை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக பணத்தை பெற்று இருந்தார்.

பின்னர் அவர்களை சிங்கப்பூருக்கு அனுப்புவதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஏஜெண்டாக பணிபுரிந்து வரும் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியை சேர்ந்த சையத் காதரிடம் (43) காமராஜ் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்தை கொடுத்துள்ளார். ஆனால் சையத் காதர் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கொலை மிரட்டல்

இதனைதொடர்ந்து காமராஜ் தான் வழங்கிய பணத்தை திரும்ப கேட்டார். இதையடுத்து, சையத் காதர் ரூ.1¾ லட்சத்தை காமராஜிடம் திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்தை சையத்காதர் தராததால் காமராஜர் அவரை நேரில் சந்தித்து கேட்டதற்கு அவர் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசில் காமராஜ் புகார் அளித்தார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் பணமோசடி செய்த சையத் காதரை கைது செய்து சிறையில் அடைத்தார்.


Next Story