ரூ.90 ஆயிரம் மோசடி செய்தவர் கைது
ரூ.90 ஆயிரம் மோசடி செய்தவர் கைது
தஞ்சை மாவட்டம் திருவையாறைசேர்ந்தவரிடம் வேலை வாங்கித்தருவதாக ரூ.90 ஆயிரம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெளிநாட்டில் வேலை
தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்த 35 வயது வாலிபர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக தனது நண்பர் மூலம் சிவகங்கையை சேர்ந்த ரியல் எஸ்டேட் மற்றும் வெளிநாட்டு வேலைக்கு ஆள்கள் அனுப்பும் தொழில் செய்து வரும் உலகுசாமியை (45) கடந்த சில மாதங்களுக்கு முன்பு அணுகினார்.
அதற்கு வாலிபரிடம், உலகுசாமி ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் வாங்கிக் கொண்டு, விசா மற்றும் வேலை உரிமத்தை வழங்கினார்.
அவற்றை எடுத்துக் கொண்டு திருச்சி விமான நிலையத்துக்குச் சென்ற வாலிபருக்கு விசாவும், வேலைக்கான உரிமமும் போலி என்பது தெரிய வந்தது.
ரூ.90 ஆயிரம் மோசடி
இதையடுத்து, உலகுசாமியிடம் பணத்தை திருப்பி தருமாறு அந்த வாலிபர் கேட்டார்.
இதைத்தொடர்ந்து, ரூ.23 ஆயிரம் வரை திருப்பி கொடுத்தார். மீதி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதையடுத்து ரூ.90 ஆயிரத்தை தராமல் உலகுசாமி ஏமாற்றுவதாக தஞ்சை சைபர் கிரைம் போலீசில் அந்த வாலிபர் புகார் செய்தார்.
அதன் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உலகுசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறிார்கள்.