கைதான வாலிபருக்கு திடீர் உடல் நலக்குறைவு


கைதான வாலிபருக்கு திடீர் உடல் நலக்குறைவு
x
தினத்தந்தி 26 July 2023 6:45 PM GMT (Updated: 26 July 2023 6:46 PM GMT)

டாஸ்மாக் ஊழியரை வெட்டிய வழக்கில் கைதான வாலிபருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

குளச்சல்:

டாஸ்மாக் ஊழியரை வெட்டிய வழக்கில் கைதான வாலிபருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

குளச்சல் அருகே இரும்பிலி பொட்டல்கரையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 53). இவர் குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு அரசு டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். கடந்த 8-ந் தேதி இரவு வழக்கம்போல் டாஸ்மாக் கடையை பூட்டிவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அங்கு இருளில் பதுங்கியிருந்த மர்ம நபர் கோபால கிருஷ்ணனை அரிவாளால் வெட்டி விட்டு பணத்தை பறிக்க முயன்றார். அப்போது கோபாலகிருஷ்ணன் கூச்சல் போடவே மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனால் ரூ.6 லட்சத்து 55 ஆயிரம் தப்பியது. கோபால கிருஷ்ணன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து கோபாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மேற்கு நெய்யூர் சரலை சேர்ந்த அருள் சஜு (30) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர் இரவு இரணியல் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது அவர் தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறினார். அதைத்தொடர்ந்து அருள் சஜுவுக்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி அருள் சஜுவை போலீசார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story