தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை
மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து நாகையில் கடல் சீற்றமாக காணப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் நாகை வந்துள்ளனர்.
மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து நாகையில் கடல் சீற்றமாக காணப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் நாகை வந்துள்ளனர்.
மாண்டஸ் புயல்
அந்தமான் தீவுகள் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறி சென்னை, புதுச்சேரிக்கு இடையே கரையை கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால் இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் நேற்று நாகையில் கடல் சீற்றமாக காணப்பட்டது. நாகை மாவட்டத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி அரக்கோணம் 4-வது தேசியபேரிடர் மீட்புபடையில் இருந்து 25 வீரர்களை கொண்ட மீட்பு குழுவினர் நாகை வந்தனர். அவர்கள் நாகையில் உள்ள பாரதிதாசன் அரசு கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் சந்தித்து, கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மிககனமழை
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணம் 4-வது தேசியபேரிடர் மீட்புபடையில் இருந்து 25 வீரர்களை கொண்ட மீட்புகுழுவினர் நாகை மாவட்டத்திற்கு மீட்பு பணிகளுக்காக வந்துள்ளனர்.
வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய அவசரக்கால கட்டுப்பாட்டு அறை மையம் அமைக்கப்பட்டு, 04365-1077 எனற கட்டணமில்லா தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது.
மீனவர்கள்
இந்த தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பொதுமக்கள் இயற்கை இடர்பாடு மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் தொடர்பான தேவைகள் குறித்தும் தெரிவிக்கலாம். மேலும் அவசரகால மையத்தை 04365-251992 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 8438669800 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் மீனவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.