சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி


சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி
x

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடந்தது.

பெரம்பலூர்

நவராத்திரி விழா நிறைவு

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் 42-ம் ஆண்டு லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி நிறைவு விழா நடந்தது. விஜயதசமியான நேற்று உற்சவ அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவில் பக்தர்கள் பூத்தட்டுகளில் சுமந்து வந்த பூக்கள் மூலவர் அம்மனுக்கு சாற்றப்பட்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து உற்சவ அம்மன் புறப்பாடு மற்றும் கோவில் வளாகத்தில் அம்பு போடுதல் நிகழ்ச்சியுடன் லட்சார்ச்சனை மற்றும் நவராத்திரி விழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இதையடுத்து கோவில் நடை வருகிற 27-ந்தேதி திறக்கப்படவுள்ளது.

அம்பு போடுதல் நிகழ்ச்சி

இதேபோல் நவராத்திரி நிறைவு நாளான நேற்று இரவு பெரம்பலூர் தெப்பக்குளம் அருகே சிறப்பு அலங்காரங்களில் மரகதவல்லி தாயார், அகிலாண்டேஸ்வரி, ரேணுகாம்பாள், அங்காளபரமேஸ்வரி ஆகிய உற்சவ சுவாமிகள் மேள, தாளத்துடன் ஊர்வலமாக வந்து நடைபெற்ற அம்பு போடுதல் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர்.

ஊஞ்சல் உற்சவம்

இதேபோல் கீழப்புலியூர் ஊராட்சியில் உள்ள புலியூர் திருப்பதி என்றழைக்கப்படும் ஸ்ரீதேவி, பூமாதேவி, கோதாதேவி, ஸ்ரீபத்மாவதி சமேத வெங்கடேசபெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம் 10 நாட்கள் நடந்தது. தினமும் பத்மாசனத்தில் அமர்ந்த கோலம், தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கடந்த 20-ந்தேதி இரவு தாயார் திருவடி சேவை நடைபெற்றது.

நவராத்திரி உற்சவம் நிறைவு நிகழ்ச்சியாக விஜயதசமி விழா நேற்று இரவு நடந்தது. வெங்கடேசபெருமாள் ஊருக்குள் புறப்பாடு செய்து அம்பு போடுதல் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து சஹஸ்ர (1008) தீபம் ஏற்றப்பட்டு, பெருமாள் தாயார் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.

பக்தர்கள் தரிசனம்

இதில் உற்சவ உபயதாரர் பாரதிராஜா, கீழப்புலியூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நடராஜன், செல்வராஜ், கோவில் காரியதரிசி ரத்தினம், தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசமூர்த்தி பாபு மற்றும் பெரம்பலூர், வாலிகண்டபுரம், சிறுகுடல், செங்குணம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் கிராம மக்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டு பெருமாள் மற்றும் தாயாரை வழிபட்டனர். விஜயதசமி சிறப்பு பூஜைகளை கோவில் ஸ்தானிகம் கோபாலன் அய்யங்கார் மற்றும் வாஸ்துநிபுணர் ஸ்ரீராம் ஆதித்யா ஆகியோர் நடத்தினர்.


Next Story