நகராட்சி பெண்கள் பள்ளியில் கலைத்திருவிழா போட்டி


நகராட்சி பெண்கள் பள்ளியில் கலைத்திருவிழா போட்டி
x
தினத்தந்தி 25 Nov 2022 4:30 PM GMT (Updated: 25 Nov 2022 4:31 PM GMT)

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளியில் கலைத்திருவிழா போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் பள்ளியில் கலைத்திருவிழா போட்டியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தொடங்கி வைத்தார்.

கலைத்திருவிழா போட்டி

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் மாணவர்களின் கலைத் திறன்களை ஊக்கப்படுத்தும் விதமாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் பள்ளி அளவில் 23-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கலைத் திருவிழா போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைத் திருவிழா போட்டிகள் 6 முதல் 8 -ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும் மொத்தம் 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்படவுள்ளது. போட்டிகள் தனி நபர் அல்லது குழுக்களாக கலந்து கொள்ளலாம்.

மாநில அளவிலான போட்டி

பள்ளி அளவில் நடை பெறும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகள் வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலும், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

மேலும், மாநில அளவிலான கலைத் திருவிழா இறுதி போட்டிகள் ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடத்தப்படுகிறது.

இவற்றில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் மற்றும் கலையரசன், கலையரசி என்ற விருதுகளும், மாநில அளவில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களின் கலைத்திறன்கன் ஊக்கப்படுத்தப்படும்.

கல்வி சுற்றுலா

மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மை பெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் தலைமையில் இந்திய அரசமைப்புச் சட்டம் - முப்புரை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் ஏற்றுகொண்டனர்.

நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மு.பெ.கிரி எம்.எல்.ஏ., மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் விஜயன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story